தமிழகம்

12 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் இயக்கம்: போடி ரயில் நிலையத்தில் இறுதிக் கட்ட பணிகள் மும்முரம்

என்.கணேஷ்ராஜ்

போடி: புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.19-ம் தேதி முதல் போடிக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக போடி ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் வண்ண மயமாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

போடி - மதுரை இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில், 2010 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. பின்னர் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இருப்பினும், குறைவான நிதி ஒதுக்கீடு, கரோனா, அரசியல்வாதிகளின் ஆர்வமின்மை உள்ளிட்ட பல காரணங்களில் மந்த நிலையிலேயே பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வரை அடுத்தடுத்து பணிகள் முடிக்கப்பட்டு கடந்த அக்.1 முதல் தேனி வரை பயணிகள் தினசரி ரயில் இயக்கப்படுகிறது.

கடந்த மாதம், தேனியில் இருந்து போடி வரை 15 கி.மீ. தூரத்திலான பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, தேனி வரை இயக்கப்படும் ரயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மதுரை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20601) பிப்.19 முதல் போடி வரை நீட்டிக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்காக போடி ரயில் நிலையத்தில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பெயர் பலகை எழுதுதல், வர்ணம் பூசுதல், குடிநீர் தொட்டி அமைத்தல், 2-வது பிளாட்பார குடிநீர் குழாய்களுக்கு இணைப்பு வழங்குதல், சுற்றுச்சுவர்களில் டைல்ஸ் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரயில்நிலைய கட்டிடங்கள் முற்றிலும் இடிக்கப்பட்டு தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் ஓய்வறை, டிக்கெட் புக்கிங் அறை, சமிக்ஞை பிரிவு, நடைபாதை மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடிவடைந்து பயணிகள் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் ஊருக்கு ரயில் வர உள்ளதால் பலரும் தினமும் வந்து ரயில்வே கட்டுமானப் பணிகளை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், ரயில் இயக்கத்துக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. தினமும் சமிக்ஞை குறித்த கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம்.

லூப் லைன், ரயிலுக்கு தண்ணீர் ஏற்றுவதற்கான குழாய்கள் அமைப்பு உள்ளிட்ட வேலைகளும் நிறைவடைந்துள்ளன. சிவில் உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளன. அதுவும் ஒருவாரத்தில் முடிக்கப்பட்டு ரயில் நிலையம் தயார் நிலையில் வைக்கப்படும் என்றனர்.

நிலக்கரி, டீசல் இன்ஜின்களில் மீட்டர்கேஜ் பாதையில் இயங்கிய ரயில் தற்போது நவீன தொழில்நுட்பத்தோடு இயக்கபட உள்ளதால் போடி மக்கள் இந்த ரயில் இயக்கத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். புதிய ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலரும் முன்பதிவுக்காக காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT