இலங்கைக்கு போர் கப்பல் விற்பனை செய்யும் விவகாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் இடையில் நடைபெற்ற கடிதப் பரிமாற்ற விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கைக்கு போர் கப்பல்களை விற்பனை செய்ய மத்திய அரசுக்கு தடை விதிக்கக்கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடுகையில், ‘இலங்கைக்கு விற்கப்படுவது ரோந்து கப்பல்கள். அது போர் கப்பல்கள் அல்ல. அந்தக் கப்பல்களில் போருக்குப் பயன்படுத்தும் ஆயுதங்கள் இருக்காது. இந்த கப்பல் விற்பனை தொடர்பாக கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. போர் கப்பல் விற்பனை தொடர்பாக தமிழக முதல்வர் கடிதம் எழுதியபோது, இலங்கைக்கு விற்பனை செய்வது ரோந்து கப்பல்தான் என மத்திய அரசு கூறியது’ என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடுகையில், ‘இலங்கைக்கு விற்கப்படுவது போர் கப்பல்களா, இல்லையா என்பதை நிபுணர் குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இரு கப்பல்களும் நூறு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு விற்கப்படுகின்றன. இலங்கைக்கு போர் கப்பல் விற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு 3 கடிதங்கள் எழுதியுள்ளார்.
அதில் ஒரு கடித்தை மட்டுமே தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அந்தக் கப்பல்கள் தமிழகம் வழியாகத்தான் கொண்டு செல்லப்படும். எனவே அதை எதிர்த்து இங்கு வழக்கு தொடரலாம்’ என்றார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனிடம், இலங்கை கப்பல் விற்பனை விவகாரம் தொடர்பாக முதல்வர் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதங்கள், அவற்றுக்கு மத்திய அரசு அளித்த பதில்கள் போன்ற விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.