திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி குருமன்ஸ் சமூகத்தினர் நேற்று முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர். ஆய்வு கூட்டம் முடிந்ததும், கூட்ட அரங்கில் இருந்து அமைச்சர்கள் வெளியே வந்தனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏற முயன்றபோது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை, பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி குருமன்ஸ் சமூகத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், குருமன்ஸ் குல அடையாளமாக திகழும் ஆயுதங்களை கையில் ஏந்தி இருந்தனர்.
அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், அமைச்சரிடம் முக்கிய பிரமுகர்கள் மனு அளித்தனர்.
இது குறித்து குருமன்ஸ் சமூகத்தினர் கூறும்போது, “குருமன்ஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். மானுடவியல் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பல கட்ட கள ஆய்வுகளை நடத்தி விட்டனர். ஆனாலும், பழங்குடியின ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி, எங்களது குல வழக்கப்படி செய்யப்படும் வழிபாடு முறைகளை தெரிவித்தோம். மேலும், எங்களது பாரம்பரிய குல தொழிலையும் விளக்கினோம். அதன்பிறகும், எங்களுக்கு பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர்கள் மறுக்கின்றனர்.
இதனால் பிள்ளைகளின் கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. போராட்டம் நடத்தும்போது, பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கின்றனர். பின்னர், மறுத்துவிடுகின்றனர்.
எம்பிசி ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதால், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த எங்களால், பழங்குடியினர் சலுகைகளை பெற முடியவில்லை. எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் மனு அளித்துள்ளோம். அவரும், மனு மீது பரிசீலனை மற்றும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்” என்றனர்.