சென்னை: பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ரூ.20 கோடியில் 4300 சதுர அடி பரப்பளவில் 50 படுக்கை வசதியுடன் கட்டப்படவுள்ள தீவிர சிகிச்சை பிரிவிற்கான கட்டுமான பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,"முதல்வர், நிதி நிலை அறிவிப்பின்போது அறிவித்த 136 அறிவிப்புகளில் ஒரு அறிவிப்பான திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடுதலாக 50 படுக்கை வசதிகளுடன் ரூ.20 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், அதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆணைகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் 4 அல்லது 5 மாதத்திற்குள் நிறைவுபெற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. இதற்கு முன்னாள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 600 முதல் 700 பேர் மட்டுமே புறநோயாளிகளாக வருகை புரிந்து வந்த நிலை மாறி தற்பொழுது 1200 முதல் 1300 புறநோயாளிகள் வந்து பயன்பெற்றுவருகிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரூ.4 கோடி செலவில் கேத்லாப் கருவி கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. விரைவாக, இம்மருத்துவமனையில் கேத்லாப் கருவி அமைக்கப்படவுள்ளது. மேலும், ரூ.13 லட்சம் செலவில் கூடுதலாக 10 டையாலசிஸ் இயந்திரங்கள் வாங்கிதருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரடாச்சேரி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கான ஆணை தரப்பட்டுள்ளது. மன்னார்குடி, திருவாரூர் பகுதிகளில் நகர்புற நல வாழ்வு மையங்கள் கட்டும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது விரைவில் இக்கட்டடங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், மொத்தம் 24 கட்டடங்கள், 22 துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணிகள் ரூ.5 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துணை சுகாதார நிலையம் என்பதன் அடிப்படையில் அனைவருக்குமான மருத்துவ சேவையில் திருவாரூர் மாவட்டம் தன்னிறைவு பெறுகிறது. திருத்துறைப்பூணடியில் ஒரு சித்தா பிரிவு கட்டடமும் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற பல பணிகள் நமது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது.
இளைய சமுதாயத்தினரை சீரளிக்கும் போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அண்மையில் உயர் நீதிமன்றம் பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருள் தடை சட்டத்திற்கு எதிராக வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.
முன்னதாக, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
‘அவசர நிலை கருதியும், பொதுநலன் கருதியும் குட்கா, பான் மசாலாபோன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே உணவு பாதுகாப்பு சட்டத்தில், துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தைமீறி புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.