சென்னை: "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வரும் 31-ம் தேதிதான் தொடங்குகிறது. எனவே, இன்னும் நாட்கள் இருக்கிறது. எனவே களத்தைப் பொறுத்தவரை அது எங்களுடையது. வெற்றி பெறுவது நாங்கள்தான்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வரும் 31-ம் தேதிதான் தொடங்குகிறது. எனவே இன்னும் நாட்கள் இருக்கிறது. எனவே களத்தைப் பொறுத்தவரை அது எங்களுடையது. வெற்றி பெறுவது நாங்கள்தான்.
எனவே, அவர்கள் முன்னே சென்றுவிட்டனர், வேட்பாளர் அறிவித்துவிட்டனர், ஊழியர் கூட்டம் அறிவித்துவிட்டனர் என்பதெல்லாம் பெரிதல்ல. களமே எங்களுடையது, வெற்றியும் எங்களுடையதுதான். கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளோம். ஆட்சிமன்றக் குழு கூடி விரைவிலேயே வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
அதிமுக ஜனநாயகம் மலர்ந்த ஒரு இயக்கம் என்பதால், விருப்பமனுக்களைப் பெற்று ஆட்சிமன்றக் குழு முடிவு செய்து வேட்பாளரை அறிவிக்கிறோம். திமுக மாதிரியான ஒரு சர்வாதிகார கட்சியோ, ஜமீன்தார் கட்சியோ கிடையாது. எனவே உரிய நேரத்தில் நாங்கள் எங்களது வேட்பாளரை அறிவிப்போம்" என்று அவர் கூறினார்.