தமிழகம்

கோவை | சுகாதாரத்துறை உதவியுடன் காசநோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை: 9 மாதங்களில் 623 பேர் பயன்

க.சக்திவேல்

கோவை: இந்தியாவில் காசநோயை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. காசநோய் ஒழிப்பில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பும் அவசியம் என்பதால்,தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் கண்டறியப்படும் நோயாளிகளின் விவரங்களை அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வோர் அனைவரிடத்திலும் சிகிச்சை காலம் முழுமைக்கும் மருந்து, மாத்திரைகளை வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இருப்பதில்லை.

எனவே, அவர்கள் பாதியில் சிகிச்சையை நிறுத்திவிடாமல் தவிர்க்கவும், எந்த காசநோயாளியும் சிகிச்சை பெறுவதில் இருந்து விடுபட்டுவிடக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவையில் 15 தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனைகளைப் போன்றே இலவச சிகிச்சை பெறும் ‘ஃபாஸ்ட்’ மையங்கள் தொடங்கப்பட்டன. அதன் மூலம் கடந்த டிசம்பர் வரை 623 நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் (காசநோய்) எம்.சக்திவேல் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளை நாடும்ஏழை மக்களுக்கு இந்த மையங்களில் அரசு மருத்துவமனைகளைப்போன்றே இலவச பரிசோதனை, காசநோய் உறுதிசெய்யப்பட்டால் இலவச மருந்து, மாத்திரைகள், சிகிச்சைபெறும் காலத்தில் வழங்கப்படும் மாதம் ரூ.500 உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை இருந்தால் 6 மாதங்களுக்கு ரூ.1,000 ஆகியவை வழங்கப்படுகிறது.

நோயாளியின் விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை பதிவு செய்வது, காசநோயின் வகையை கண்டறிவது, உதவித்தொகைக்கு நோயாளியின் வங்கிக் கணக்கு விவரத்தை பெறுவது, போன்றவற்றை தனியார் மருத்துவமனைகளின் பணியாளர்களே மேற்கொள்கின்றனர். ஃபாஸ்ட் சென்டரில் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். தற்போது கோவையில் புதிதாக இணைந்த 5 ஃபாஸ்ட் மையங்கள் என மொத்தம் 20 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவமனைக்கு ஊக்கத்தொகை

இவ்வாறு சிகிச்சை அளிக்க ஒத்துழைக்கும் மருத்துவமனை, மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில், நோயாளியை கண்டறிந்து தகவல் தெரிவிக்க தலா ரூ.500, சிகிச்சை காலம் முடிந்த பிறகு அல்லது நோயாளி குணமான பிறகு ரூ.500, நோயாளிகளுக்கு மாத்திரை வழங்கி உதவுவதற்காக ரூ.1,000 என ஃபாஸ்ட் சென்டர் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒரு நோயாளிக்கு தலா ரூ.2,000வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இதேபோன்று கோவையில் உள்ள மற்ற தனியார் மருத்துவ மனைகளிலும் ஃபாஸ்ட் மையங்கள் தொடங்கப்பட்டால் காசநோயாளிகள் விவரங்கள் முழுமையாக அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு முழு தகவல் இருந்தால்தான் காசநோய் ஒழிப்பு என்பதுவருங்காலத்தில் சாத்தியமாகும். எனவே, ஃபாஸ்ட் மையங்கள் அமைக்க தனியார் மருத்துவமனைகள் முன்வந்தால் உதவ தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT