தமிழகம்

சோ மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

பத்திரிகையாளரும் நடிகருமான சோ ராமசாமியின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய இணை அமைச்சர்)

தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர் சோ ராமசாமி. தனது கருத்து எதுவாக இருந்தாலும் அதனை துணிவுடன் வெளிப்படுத்தக் கூடியவர். தாம் ஆதரிக்கும் கட்சியின் குறைகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்ட தயங்காதவர். நாடகங்கள் மூலமும், துக்ளக் இதழ் மூலமும் அவர் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது மறைவு இந்திய ஜனநாயகத்துக்கு பேரிழப்பாகும்.

நாராயணசாமி (புதுச்சேரி முதல்வர்)

அனைத்து அரசியல் கட்சிகளின் தவறான கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் வெளிப்படையாக விமர்சனம் செய்யக்கூடிய துணிச்சல் மிக்க எழுத்தாளர். பன்முகத்தன்மை கொண்டவர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நெருங்கி பழகியவர். அரசியல் கருத்துகளையும், சமூக சிந்தனையையும் மாறுபட்ட கோணத்தில் அணுகி உண்மையான கருத்தை மிக ஆணித்தரமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் தெரிவிப்பதில் வல்லவர். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்)

வழக்கறிஞராக, நாடக-திரைப்பட நடிகராக, வசனகர்த்தாவாக, பத்திரிகையாளராக என பன்முக திறன் படைத்தவர் சோ ராமசாமி. கடந்த 46 ஆண்டுகளாக துக்ளக் இதழை நடத்தி தமிழக பத்திரிக்கை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஆண்டுதோறும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவை நடத்தி வாசகர்களின் விமர்சனங்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுகிற புதுமையை புகுத்தியவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)

கலைத்துறை, பத்திரிகை மற்றும் அரசியல் துறைகளில் தன் முத்திரையை பதித்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று கூறும் அளவுக்கு அனைவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனாலும் அவரது விமர்சனங்கள் எல்லை மீறாமலும், கண்ணியத்துடனும் அமைந்திருக்கும். தமிழக அரசியலிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சோ ராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்)

எழுத்தாளரும் நாடக உலகில் சிறப்பு முத்திரை பதித்தவருமான சோ மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். அரசியல் ரீதியாக நான் சார்ந்திருந்த திமுகவை சாடினாலும் அவரது முகமது பின் துக்ளக் நாடகம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நெருக்கடி காலத்தில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக மத்திய அரசை விமர்சித்து எழுதினார். அவர் என்னை கடுமையாக கிண்டல் செய்து துக்ளக் கேள்வி-பதிலில் எழுதுவதை நான் மிகவும் ரசிப்பேன். அவரது விமர்சன எழுத்துக்கள், இதிகாச படைப்புகள் காலத்தால் அழியாத புகழோடு நிலைக்கும்.

தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)

அரசியல் சூழலை எழுதுவது மட்டுமல்லாமல் தன் எழுத்துக்களால் தமிழக அரசியல் சூழலையே பல முறை மாற்றியவர் சோ. தமிழக பாஜக-வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்)

சிறந்த அரசியல் விமர்சகரான சோ, அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் அணுகுமுறைபற்றி தயக்கமின்றி விமர்சிப்பவர். துக்ளக் இதழின் சார்பாக ஆண்டுதோறும் வாசகர் கூட்டம் நடத்தி அரசியல் நிகழ்வுகள் பற்றி தயக்கமின்றி பேசுவார். அவரது மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்)

பல்வேறு துறைகளில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் சோ ராமசாமி. தன் மனதில் பட்டதை வெளிப்படையாக தன் பத்திரிக்கையின் மூலமும், பொது இடங்களில் பேசும் போதும் துணிச் சலாக எடுத்துரைக்கும் நற்குணம் படைத்தவர்.

கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)

திராவிட இயக்க கொள்கைகளுக்கு கடும் எதிரி சோ. தயவு தாட்சண்யமின்றி விமர்சிப்பவர். ஆனால், நட்புமுறையில் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் பழகுவார். அவரது நகைச்சுவையும், நையாண்டி எழுத்துக்களும் எதிரிகளாலும் அவர் யாரை தாக்குகிறாரோ அவர்களாலும் ரசிக்கப்படக் கூடியவை. சனாதனத்தின் எழுத்துலக வக்கீல் அவர். ஆனால், பழகும்போதோ பண்பாடு குறையாதவர்.

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்)

அவர் வெற்றிகரமான பத்திரிக்கையாளர் மட்டுமின்றி ஆற்றல் வாய்ந்த, கூர்மையான அரசியல் விமர்சகர். அவருடைய அரசியல் விமர்சனங்கள், பெரும்பாலும் மாற்றுக்கருத்துள்ளவர்களாலும் வரவேற்கப்படுவது அவருக்குள்ள சிறப்பு.

அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞர் அணித் தலைவர்)

துக்ளக் விழாவில் அவரது உரைகள் அரசியல் பாடங்களாக அமைந்திருந்தன என்றால் அது மிகையல்ல. தமிழக அரசியலிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சோ ராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

கவிஞர் வைரமுத்து

தமிழ்நாட்டில் இன்று புலனாய்வு இதழியல் என்பது விரிந்து வளர்ந்திருப்பதற்கு வித்திட்டவர் அவர்தான். அவருடைய கேள்வி பதில்களுக்காக ஒரு கணிசமான கூட்டத்தைக் காத்திருக்கச் செய்த சொல்லாடல் மிக்கவர் சோ.

‘முகமது பின் துக்ளக்’, ‘சம்பவாமி யுகே யுகே’ போன்ற நாடகங்கள் அவரை மேடை வரலாற்றில் உயர்த்திப் பிடிக்கும். அவர் எழுதிய மகாபாரதம் காலத்தை வென்று கட்டியங்கூறும். இப்படி ஒரு பல்துறை வித்தகர் இன்னொருவர் தோன்ற முடியுமா என்ற கேள்விதான் அவரது கீர்த்தி. அவரை இழந்து வாடும் அனைவர்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ந.சேதுராமன், கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், புதுச்சேரி எம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT