தமிழகம்

பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்ல பிரச்சாரம்: காங்கிரஸ் நடத்தும் ‘கையோடு கை கோர்ப்போம்’ - இன்று தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக காங்கிரஸ் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பிரச்சாரம் இன்று தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷியாமா முகமது நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வரலாற்று சிறப்புமிக்க 3,500கி.மீ இந்திய ஒற்றுமை பயணத்தின்131-வது நாளை ராகுல்காந்தி கடந்துள்ளார். வழியெங்கும் மக்களின் அனுபவங்களை உன்னிப்பாக கேட்டுக்கொண்டே அவர் பய ணத்தை மேற்கொள்கிறார்.

நாடு முழுவதும் பாஜக ஆட்சி மீது நம்பிக்கையற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்தசொத்துகளில் முதல் 10 பெரும்பணக்காரர்களிடம் 64 சதவீதம்சொத்துகள் உள்ளன. 50 சதவீதத்துக்குக் குறைவானவர்களிடம் 6சதவீத சொத்துகள் மட்டுமே உள்ளன. மோடியின் நண்பர்கள் வாங்கிய ரூ.72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு விவசாயியின் கடன்கூட தள்ளுபடி செய்யப்படவில்லை.

மோடியின் செல்வாக்கை உயர்த்தி பிடிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் பாஜக செலவழித்துள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் இதுவரை அவர் நிறைவேற்றவில்லை. மாறாக, இளைஞர்களிடையே வேலையின்மை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் எல்லையில் 2 ஆயிரம் சதுரஅடி நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளது. இவ்வாறு 2014-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நாடு இப்போது நெருக்கடியான நிலையில் உள்ளது. எனவே, மோடி ஆட்சியில்நடந்த தவறுகளை, மக்கள் விரோத செயல்களை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக 6 லட்சம் கிராமங்களில், 2.5 லட்சம் பஞ்சாயத்தில், 10 லட்சம் வாக்குச்சாவடி மையங்களில் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

இதன்மூலம் மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது. இந்த பிரச்சாரம் நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 26-ம்தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்துக்கான பிரச்சாரத்தை, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT