சென்னை: மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க மின் ஊழியர்களுக்குத் தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மின் துறை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, மின்சார விபத்தில் மரணமடைந்த மின் ஊழியர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மின் வாரிய ஒயர்மேன் குமணன், நாகை மாவட்ட மின்ஊழியர் சிவசங்கரன், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த மின் ஊழியர் வெங்கடேசன், காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதி மின் ஊழியர் பக்கிரிசாமி, ஜோலார்பேட்டை மின் ஊழியர்முருகன் ஆகியோர் உயிரிழந்துள் ளனர். மேலும் பல மின் ஊழியர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள் ளாகி, மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
மின் துறையில் பணிபுரிபவர்களுக்கு, பாதுகாப்பு மிக முக்கியமான தேவையாகும். தரமான மின் பொருட்களைக் கொள்முதல் செய்வதும், மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும்.உடனடியாக, மின்சார துறை அமைச்சர், மின் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்குத் தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
பராமரிப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடும்போது, மின் துறைப் பொறியாளர்கள் உடனிருக்க வேண்டும். மின் ஊழியர்களின் பணிச் சூழல் பாதுகாப்பில் தொடரும் அலட்சியப் போக்கை நிறுத்திவிட்டு, `2020 தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் குறியீட்டை' உடனேஅமல் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.