செங்கல்பட்டு: தாம்பரம் அருகே பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் தவறி விழுந்து சிறுமி சுருதி உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பள்ளித் தாளாளர் உட்பட 8 பேரை செங்கல்பட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வரதராஜபுரம் பிடிசி குடியிருப்புப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேதுமாதவன் மகள் சுருதி(7). இவர், தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளி சென்ற சுருதி, பள்ளி முடிந்து மாலையில் பள்ளி சார்பில் இயக்கப்பட்ட பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, முடிச்சூர் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்திலிருந்த ஓட்டை வழியாக சுருதி தவறி கீழே சாலையில் விழுந்தார்.
அப்போது அதே பேருந்தின் பின்சக்கரம் சிறுமியின் மீது ஏறியதில், சுருதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையறியாத பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை இயக்கிய நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் விரட்டிச்சென்று பேருந்தை மறித்து ஓட்டுநரை தாக்கினர். பின்னர் அந்த பேருந்துக்கும் தீ வைத்தனர். இதில் பேருந்து எரிந்து சேதமடைந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்குப் பிறகே, பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது, அவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனைக்கு உட்படுத்துவது குறித்து தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உத்தரவிட்டது.
சுருதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளிதாளாளர் விஜயன், அவரது சகோதரர்களான ரவி, பால்ராஜ், பேருந்து ஓட்டுநர் சீமான், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், யோகேஷ் சில்வேரா, பிரகாசம் மற்றும் கிளினரான 17 வயது சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் 35-சாட்சிகளும், பள்ளி நிர்வாகம் தரப்பில் 8 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதி தீர்ப்பு
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்றுநீதிபதி காயத்ரி தீர்ப்பளித்தார். அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை.
மேலும், அரசு தரப்பு சாட்சிகள் பிறழ்சாட்சியம் அளித்துள்ளதாகக்கூறி, குற்றம் சாட்டப்பட்ட பள்ளித் தாளாளர், ஓட்டுநர் உட்பட 8 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதனால், நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. உயிரிழந்த சுருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் தீர்ப்பு வெளியான நேற்று நீதிமன்றத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.