திருச்சி: தினமும் சென்னைக்கு வந்து குடியேறும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவரால் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக் கூட்டம் அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது. அதேபோல தமிழ்நாடு பெயர் விவகாரத்திலும் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி, பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வேலைக்காக இங்கு வருவது அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னையில் தினமும் 1,000 முதல் 2000 வரையிலான குடும்பங்கள் குடியேறிக் கொண்டுள்ளனர். அது நமக்கு பெரிய ஆபத்து. அவர்கள் நம்மை ஆதரித்து வாக்களிக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள். எனவே, அதையும் முறியடிக்க வேண்டிய நிலை உள்ளது.
மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களை பாதுகாக்கவும், விராலிமலை சண்முகம் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
இக்கூட்டத்தில், மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் க.வைரமணி, எம்எல்ஏக்கள் தியாகராஜன், கதிரவன், திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.