கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை உலர் தீவனமான வைக்கோ லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப் பாசனம் மூலம் நேரடியாக 26 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவும், கால்வாய் பாசனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் பாசன வசதி பெறுகிறது.
இதில், ஆற்றை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம், மலையாண்ட அள்ளி, பையூர், கால்வேஅள்ளி, அவதானப்பட்டி, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், சின்னமுத்தூர், காவேரிப்பட்டணம், தேர்பட்டி, சவுளூர், பென்னேஸ்வர மடம், நெடுங்கல், கொட்டாவூர் ஆகிய பகுதிகளில் இருபோகத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல விவசாயிகள் சார்பு தொழிலாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி மூலம் கால்நடைகளுக்கான உலர் தீவனமான வைக்கோல் கால்நடை வளர்ப்போருக்குக் கைகொடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் முதல் போக நெல் அறுவடையின் போது பெய்த தொடர் மழையால், நெற்கதிர்கள் நீரில் மூழ்கியும், சாய்ந்தும் சேதமடைந்தன.
இதனால், அறுவடையின்போது கிடைக்கக் கூடிய வைக்கோல் மகசூல் பாதிக்கப்பட்டது. வழக்கமாக அறுவடை காலங்களில் உள்ளூர் தேவைக்குப் போக மீதமுள்ள வைக்கோல் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போச்சம் பள்ளியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: போச்சம்பள்ளி, பண்ணந்தூர், வாடமங்கலம் பகுதிகளில் அதிக நெல் சாகுபடி மூலம் உள்ளூர் கால்நடைகளுக்கான வைக்கோல் நிறைவாக கிடைத்து வந்தது. இந்நிலையில், முதல் போக நெல் அறுவடையின் போது, பெய்த தொடர் மழையால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.
வயல்களில் தண்ணீர் தேங்கியதால், இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணி நடந்தது. இதனால், வழக்கமாகக் கிடைக்கும் வைக்கோல் கிடைக்கவில்லை. மேலும், அறுவடை செய்த வைக் கோலை உலர வைக்க முடியாமல் மழையால் சேதமடைந்தது. இதனால், தற்போது வைக்கோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து கால்நடை வளர்ப்போர் வைக்கோலைக் கொள்முதல் செய்யும்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 25 கிலோ முதல் 30 கிலோ வைக்கோல் கட்டு (உருளை) ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.150 வரை உள்ளூரில் கிடைத்தது.
தற்போது கூடுதல் விலை கொடுத்து வைக்கோல் வாங்குவதோடு, போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. இதனால், கால் நடை வளர்ப்போருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, பால் உற்பத்தியும் பாதிக்கும் நிலையுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். அறுவடை காலங்களில் உள்ளூர் தேவைக்குப் போக மீதமுள்ள வைக்கோல் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.