தமிழகம்

பகுத்தறிவுக் கோட்டையின் பாதுகாவலர் கோ.சி.மணி: திருமாவளவன் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சோழ மண்டலத்தில் பகுத்தறிவுக் கோட்டையின் பாதுகாவலராகத் திகழ்ந்தவர் கோ.சி.மணி என்று விசிக தலைவர் திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கோ.சி.மணி மறைவு குறித்து இன்று திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''1948 ஆம் ஆண்டிலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவரும், திமுக தொடங்கப்பட்டதிலிருந்தே அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் , முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணி மறைவெய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சோழ மண்டலத்தில் பகுத்தறிவுக் கோட்டையின் பாதுகாவலராகத் திகழ்ந்த கோ.சி.மணிக்கு எமது அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் திமுகவினருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் விசிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

தனது இளம்பிராயம் தொட்டே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டுவந்தவர் கோ.சி.மணி. திமுக துவங்கப்பட்டபிறகு சோழ மண்டலத்தில் அக்கட்சியை வலுவாகக் காலூன்றச் செய்ய அரும்பாடுபட்டவர். திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற தோழராய் நம்பிக்கைக்குரிய தளபதியாய் விளங்கியவர்.

நான்கு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் , இரண்டு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்து திறம்படச் செயல்பட்டவர்.

கோ.சி.மணி கூட்டுறவுத் துறை,வேளாண் துறை,உள்ளாட்சித் துறை என முக்கியமான துறைகளின் அமைச்சராக இருந்து சிறப்பாகப் பணி செய்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்பால் எப்போதும் பரிவும் பாசமும் கொண்டிருந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர்.

கோ.சி.மணியின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கு எமது வீர வணக்கங்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT