சென்னை: கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களின் சிலைகள் விரைவில் மக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், செய்தித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வுசெய்தார். அப்போது, செய்தித் துறை செயலர் ஆர்.செல்வராஜ், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: செய்தித் துறையின் சார்பில், காந்தி மண்டபத்தில் ஏற்கெனவே உள்ளதலைவர்களின் அரங்கங்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அரங்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் அரங்கம், மொழிக் காவலர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் இவையெல்லாம் பராமரிக்கப்படுவதோடு, புதிதாக அயோத்திதாசப் பண்டிதருக்கு உருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
இதன்படி, தற்போது 60 சதவீதபணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்குச் சிலைகளை அமைக்கும் பணி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் சுப்பராயன் சிலையும் இங்கு அமைய உள்ளது.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. இழுத்த செக்கு அமைந்துள்ள அரங்கம் புதுப்பிக்கப்படுவதுடன், அவருக்கு மார்பளவு சிலையும் அமைக்கப்படுகிறது. அவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்தபோது செக்கிழுத்தார். அதன் நினைவாக வ.உ.சி. மைதானத்தில் அவருடைய சிலை அமைக்கப்படுகிறது.
தற்போது சுதந்திரப் போராட்டத்தியாகிகளுக்கும், மொழிக் காவலர்களுக்கும், மக்களுக்காக வாழ்ந்து பணியாற்றிய தலைவர்களுக்கும் நினைவு அரங்கங்களை அரசு அமைத்து வருகிறது. அந்த அரங்கத்தில் அரசு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ளன. மருது சகோதரர்களுக்கான சிலை பணிகளில் 5 சதவீதம் முடிக்க வேண்டியுள்ளது. இப்பணிகள் முடிவுற்ற பிறகு ஒவ்வொன்றாக மக்கள் பார்க்கக்கூடிய வகையில் திறக்கப்படும் என்றார்.