சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, அந்தத் தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்தது.
இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் பணிக்குழுவுக்கு மோகன் குமாரமங்கலம் தலைமை வகிப்பார்.
குழுவின் உறுப்பினர்களாக காங்கிரஸ் கட்சியின் எஸ்.ராஜேஷ்குமார், ஜே.ஜி.பிரின்ஸ், ரூபி ஆர்.மனோகரன் உள்ளிட்ட 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் திருச்செல்வம் உள்ளிட்ட 46 நிர்வாகிகள் என மொத்தம் 62 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.