தமிழகம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் அருகில் உள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்த ஐந்து வயது சிறுமியை, கத்தியைக் காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
இளைஞர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT