சென்னை: அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக மின் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துகளை தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரப்பி வருகிறார். எனவே அதுபோன்ற கருத்துகளை அவர் பேச தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், "முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.