சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களிடம் இருந்து 2022-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி ரூ.2.90 கோடி அபராதம் வசூலித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு ஜன.1 முதல் இந்த தடை அமலில் உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இதை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இந்த தடையை அமல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ரூ.2.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் கடந்த 2022ம் ஆண்டில் 2.92 லட்சம் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1.12 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.2.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.