விருத்தாசலம்: தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் சூழல், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை முக்கிய ஒரு இடத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
இந்த நிலையில், பாஜகவினர் மாநில செயற்குழுக் கூட்டத்தை கடலூரில் கடந்த வாரம் கூட்டி, ஆளும் கட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர். ‘‘கொங்கு மண்டலத்தைப் போன்று, தென்னாற்காட்டிலும் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பதை காட்டும் வகையில், மாநில செயற்குழு இங்கு நடத்தப்பட்டுள்ளது” என்று பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
‘இப்பகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டக் கட்சிகளை நன்கு அறிந்த மக்களிடம் பாஜகவை அறிமுகம் செய்து, அண்ணாமலை ஆழம் பார்க்கிறார்’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். சில மாதங்களுக்கு முன், ‘தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும்’ என அண்ணாமலை அறிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘சொந்த ஊரை தாண்ட முடியாது’ என அண்ணாமலைக்கு எச் சரிக்கை விடுத்தார்.
அப்போதே, தனது வலிமையைக் காட்ட கடலூரில் தனது தலைமையில், அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து தற்போது மாநில செயற்குழு கூட்டத்தையும் அங்கு நடத்தி முடித்திருக்கிறார். கொலை வழக்கு மற்றும் கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கும் கடலூர் மக்களவை திமுக உறுப்பினர் ரமேஷ், மக்களைச் சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இத்தொகுதியில் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களை, தங்கள் கட்சிக்கான வாக்குகளாக மாற்றவும், அதிருப்தியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏ-க்களின் மறைமுக ஆதரவை பெறவும் பாஜக முயற்சித்து வருகிறது. அதேபோன்று சிதம்பரம் தொகுதியில் நடராஜர் கோயில் சர்ச்சையை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பாஜகவினர் கருதுவதாக கூறப்படுகிறது.
மேலும், அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் திருமாவளவனை இலக்காக வைத்து, அந்த தொகுதியிலும் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளனராம். இந்த இரு தொகுதிகளிலும், பாஜக சார்பில், முதலில் வலுவான பூத் கமிட்டிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு களமிறங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் பொறுப்பு கிடைக்காமல், நீண்டகாலமாக அதிருப்தியில் உள்ள கீழ்மட்ட திமுக விசுவாசிகளை இதற்காக பாஜகவினர் சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் பெரும்பான்மை சமூகமாகக் கருதப்படும் வன்னியர்களின் வாக்குகளை வளைக்க திட்டமிட்டு, அதற்கான செயல்களை இந்த செயற்குழு மூலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன் பாஜகவின் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை சந்தித்து, அவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடுமாறு மாவட்டத் தலைவர்களுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், பாமக, தேமுதிக என பல்வேறு அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் கோலோச்சிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி தென்னாற்காடு.
இந்த கடலூர் மண்ணில் கால் பதிப்பது பிரதான கட்சியான பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர். அதற்காகவே, கடலூர் மற்றும் சிதம்பரத்திற்கான களத்தை தற்போதே தயார் செய்து வருகின்றனர்.