மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜர் ஆன ஷர்மிகா 
தமிழகம்

சர்ச்சைக்குரிய ‘குறிப்புகள்’ - இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவர் ஷர்மிகா ஆஜர் 

செய்திப்பிரிவு

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவக் குறிப்புகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகா, இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா, சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புகளை தெரிவித்து வந்தார். சமீபத்தில் அவர் அளித்த சில குறிப்புகள், சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, ஒரு ‘குளோப் ஜாமூன்’ சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்’ போன்ற மருத்துவ கருத்துகளை தெரிவித்தார். இவை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மருத்துவர் ஷர்மிகா,சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், மருத்துவர் ஷர்மிகா இன்று (ஜன.24) அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள இயக்குனராக அலுவலகத்தில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, “ஷர்மிகா பதிவுபெற்ற மருத்துவர் என்பதால், அவரது விளக்கத்தின் அடிப்படையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும்” என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்கெனவே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT