தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூருக்கு திடீர் பயணம்: உயர் மருத்துவ சிகிச்சைக்காகவா?

செய்திப்பிரிவு

உயர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்டந்தோறும் சென்று ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சிகளை நடத்தி தொண்டர்களை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து வந்தார். இறுதியாக சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த 6, 7-ம் தேதிகளிலும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் 8-ம் தேதியும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றார். இந்த பயணம் குறித்து ஒரு சில மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரிந்துள்ளது. விஜயகாந்த் உயர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘‘சகாப்தம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காரணமாகவே விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாகவும், படத்தின் முழு வேலைகளையும் முடித்த பின்னர், சில நாட்களில் சென்னை திரும்புவார்கள்’’ எனவும் தேமுதிக கட்சி வட்டாரத்தில் சிலர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT