சென்னை: வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் வகையில்தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனைசெய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மற்றும்புறநகர் பகுதிகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால்மட்டுமன்றி, 225-க்கும் மேற்பட்ட பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில், மோர், லஸ்ஸி,ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை எல்லா தரப்பினரும் விரும்புகின்றனர்.
இந்நிலையில், வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கியஆலைகளில் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியைச்சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன்கூறியதாவது: தள்ளு வண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.
மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும்ஆவின் பொருள்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம். முதல்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்படபல்வேறு பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத் தொகைசெலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து,விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம்முதல் 15 சதவீதம் வழங்கப்படும்.வங்கி கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும்.