பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபி ஷேகத்தையொட்டி பேருந்து நிலையம் புறநகர் பகுதிக்கு இடம் மாற்றப்பட உள்ளது. அங்கிருந்து பழநி நகருக்கு பயணிகளை இல வசமாக அழைத்து வர 30 பேருந்து வசதி செய்யப்பட உள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம்தேதி நடைபெற உள்ளது. கும்பாபி ஷேகம் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் 6,000 பேரை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் 2,000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர்.
அப்போது நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழநி பேருந்து நிலையத்தை ஜன.26, ஜன.27-ம் தேதி மட்டும் புறநகர் பகுதிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதற்காக, தாராபுரம் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அங்கிருந்து பழநி நகருக்கும், நகர்ப் பகுதியில் இருந்து தற்காலிக பேருந்து நிலையத்துக்கும் பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்ல போக்குவரத்து துறை மூலம் 30 பேருந்து வசதி செய்யப்பட உள்ளது. இது மட்டுமின்றி, கும்பாபி ஷேகத்துக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த வசதியாக கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் சாலைகளில் 4 தற் காலிக வாகன நிறுத்தம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.