மதுரை: தென் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி `நாப்கின்' வழங்கும் இயந்திரம் அமைக்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழுவை எதிர் மனுதாரராகச் சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த பொழிலன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்லூரிகளில் மாணவிகள் அதிகளவில் பயின்று வருகின்றனர். மாணவிகள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் தென் மாவட்டங்களில் பல்கலைக் கழகங்கள், அனைத்து கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் தானியங்கி `நாப்கின்' வழங்கும் இயந்திரத்தையும், பயன்படுத்திய நாப்கின்களை மறு சுழற்சி செய்வதற்கான வசதியையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் `நாப்கின்' வழங்கும் இயந்திரம் அமைக்குமாறு கோரவில்லை. தென் மாவட்ட கல்லூரிகளில் மட்டும் அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது, என்றனர்.
பின்னர், மனுவில் பல்கலைக் கழக மானியக் குழுவை எதிர் மனுதாரராகச் சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.