பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காரைக்கால் மருத்துவர்களுக்கு மீண்டும்பணி வழங்கக்கோரி புதுச்சேரி அரசு மருத்துவமனை முன்பு மருத்து வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ். 
தமிழகம்

136 நாட்களாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்: அரசு மருத்துவர்கள் போராட்டத்தால் புதுச்சேரி, காரைக்காலில் புறநோயாளிகள் பாதிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 மருத்துவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி, புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் அரசு மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் தன் மகளுடன் படிக்கும் சகமாணவன் பாலமணிகண்டனுக்கு, மாணவியின் தாயார் குளிர்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்தார். கடந்தாண்டு செப்டம்பர் 7-ம் தேதி காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பால மணிகண்டன் உயிரிழந்தார்.

இவ்விவகாரத்தில் மருத்துவர்கள் உரிய சிகிச்சையளிக்கவில்லை என புகார் எழுந்தது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி திருவேங்கடம் ஆகிய இருவரையும் புதுச்சேரி சுகாதாரத் துறை பணியிடை நீக்கம் செய்தது.

136 நாட்களாகியும் இரு மருத்துவர்களுக்கும் பணி வழங்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் உடனடியாக பணி வழங்கவலியுறுத்தி நேற்று காலை புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு முன்பு, ஒரு மணிநேரம் பணிகளை புறக்கணித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வெளிப்புற சிகிச்சைப்பிரிவுக்கு வந்த நோயாளிகள் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டார்கள். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் இப்போராட்டம் நடந்தது. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அரசு மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கக் கோரி கருப்பு அட்டை அணிந்து மருத்துவர்கள் பணியாற்றினர்.

இது குறித்து மருத்துவர்கள் சங்க பொதுச்செயலர் டாக்டர் அன்புசெந்தில் கூறுகையில், "பணியிடை நீக்கத்தை நீக்கி,காரைக்கால் மருத்துவர்களை பணியில் சேர்க்க கோரிக்கை விடுத்திருந்தோம். இக்கோரிக் கையை வலியுறுத்தி நேற்று காலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் சுகாதாரத் துறையை முதலில் மேம்படுத்தக் கோரி சுகாதாரத் துறை செயலர், இயக்குநரிடம் மனுவும் அளித்துள்ளோம். 27 சிறப்பு மருத்துவர்களில் 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அங்கு காலி பணியிடங்களை முதலில் நிரப்பவேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT