தமிழகம்

சென்னை மோனோ ரயில் திட்டம் முதல்வர் விரைவில் அடிக்கல்: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை மோனோ ரயில் திட்டம் இரண்டு திட்டங்களாக மறுசீரமைக் கப்பட்டு 43.48 கி.மீ. நீளத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்துக்கு முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சட்டப்பேரவையில் போக்கு வரத்துத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம் வருமாறு:

பாஸ்கர் (தேமுதிக):

மாவட்டத் தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும் என்று கடந்த ஆண்டு பேரவையில் அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், தரும புரியில் இருந்து ஏ.சி. பஸ் இன்னும் இயக்கப்படவில்லை. தருமபுரி - சென்னை அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸும் நிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி:

தமிழகம் முழுவதற்கும் 477 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களை முதல்வர் அளித் துள்ளார். அதேபோல் 55 ஏ.சி. பஸ்களும் தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு இயக்கப் படும். அவற்றை முதல்வர் விரைவில் இயக்கி வைப்பார்.

பாஸ்கர்:

தருமபுரி மாவட்டத் தில் இண்டூர் என்ற பகுதியில் பள்ளி மாணவன் பஸ்ஸில் இருந்து விழுந்து உயிரிழந்தான். எனவே, பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

அமைச்சர்:

அந்த மாவட்டத்தில் மட்டுமே 4 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 13 வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

பாஸ்கர்:

பஸ் கட்டணத்தை உயர்த்தியும், போக்குவரத்துக் கழக நஷ்டம் குறையவில்லை.

அமைச்சர்:

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பஸ் கட்டணம் குறைவு. டீசல் விலை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லிட்டர் ரூ.43-க்கு விற்றது. தற்போது ரூ.64 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தின சரி செலவு பல கோடி அதிகரித்துள் ளது. முதல்வர் ரூ.814 கோடி டீசல் மானியம் தந்து உதவியுள்ளார்.

பாஸ்கர்:

சென்னையில் மூன்று வழித்தடங்களில் 111 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் இயக்கப்படும் என்று கடந்த 2011-12ல் அறிவிக்கப்பட்டது. பிறகு 4-வது வழித்தடமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், இன்னும் டெண்டர்கூட முடிந்தபாடில்லை.

அமைச்சர்:

எங்கள் முதல்வர் சொல்லும் சொல்லை வெல்லும் சொல் எதுவும் இல்லை. மோனோ ரயில் திட்டத்துக்கான டெண்டர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்துக்கான அடிக்கல்லை விரைவில் முதல்வர் நாட்டுவார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மோனோ ரயில் தொடர்பாக போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் கூறியிருப்பதாவது:

சென்னை மோனோ ரயில் திட்டத்தை, பொது மற்றும் தனி யார் பங்களிப்பு மூலம் 43.48 கி.மீ. தூரத்துக்கு 2 திட்டங்களாக மறுசீரமைத்து செயல்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதன்படி, திட்டம் 1-ல் பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரையில் இணைப்பாக போரூர் முதல் வடபழநி வரை 20.68 கி.மீ. தூரத்துக்கும் மற்றும் திட்டம் 2-ல் வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கி.மீ. தூரத்துக்கும் செயல்படுத்தப்பட உள்ளது. கோவையிலும் இத்திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற் கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT