வேந்தர் மூவிஸ் மதன், 9 நாள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இள நிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சீட் வாங்கித் தருவதாக 123 பேரிடம் வேந்தர் மூவிஸ் மதன் ரூ.84.27 கோடி பெற்று மோசடி செய்தார். சுமார் 6 மாத காலம் தலை மறைவாக இருந்த அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திருப்பூரில் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர்.
மோசடி தொடர்பாகவும், அதன் பின்னணி பற்றியும் தீவிர விசாரணை நடத்தவேண்டி இருப்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், போலீஸ் காவல் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அவரிடம் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தினர். திருப்பூரில் உள்ள தோழி வீட்டுக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தப் பட்டது. உத்தராகண்ட் மாநிலத்தில் வாங்கிய சொத்துகள், தலைமறைவு காலத்தில் உதவி செய்தவர்கள் ஆகியவை குறித்த விவரங்களையும் போலீஸார் சேகரித்தனர்.
இந்நிலையில், மதனின் 9 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர். மதனை டிசம்பர் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, மதன் மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.