சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் மாநிலத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற புலம் பெயர்ந்த தமிழர்களின் பொங்கல் விழாவில் அவர் பங்கேற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. தனது தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.
அகமதாபாத் நகரில் வசிக்கும், புலம்பெயர்ந்த தமிழர்கள் சார்பில் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பன்னீர்செல்வம் பங்கேற்றார். இதில், தமிழகத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தமிழக பாரம்பரிய உடையுடன் பங்கேற்றனர். மேலும், தமிழக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில், புதுச்சேரி யூனியன் பிரதேச உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று சென்னை திரும்பும் ஓபிஎஸ் இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள், மாநில தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.