மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி திமுக-பாஜக அரசியல் மோதலால் தாமதமாகி வருவாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. அதிமுக ஆட்சியில் இந்த மருத்துவமனையை தஞ்சாவூருக்கு கொண்டு செல்ல முயன்றார்கள்.
ஆனால், மத்திய அரசு, மதிப் பெண்கள் அடிப்படையில் மதுரையை தேர்வு செய்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி, ஒற்றை செங்கலைக் காண்பித்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி இதுவரை தொடங்கவில்லை என்று கிண்டலடித்தார்.
மேலும் திமுக ஆட்சி அமைந்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படும் என்றார். இருப்பினும், தற்போது வரை அதற்கான பணி தொடங்கவில்லை. ஒரே ஆறுதலாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி திமுக-பாஜக அரசியல் மோதலால் தாமதமாகி வருவதாகக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) காட்டும் ஆர்வம்கூட திமுகவுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால், தற்போது மதுரை மாநகர் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நாளை (ஜன.24) போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜப்பான் நிதி வருவது தாமத மாகும் நிலையில் மத்திய அரசு தன் பங்கீடான ரூ.400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மக்களவையில் நான் மட்டுமே 17 முறை பேசியுள்ளேன். அதேபோல் மாணிக்கம் தாகூர் எம்பியும் பேசி வருகிறார். மதுரையுடன் அறிவித்த இமாச்சலப்பிரதேஷ எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.
ஆனால் திட்டமிட்டே அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்காமல் உள்ளது. அதனால் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குமாறு இப்போராட்டத்தில் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.