திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறையினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர் களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடத்தப் பட்டுள்ளது.
இந்த முகாம் வருடத்தில் இரண்டு முறையாவது நடத்த வேண்டும். மற்ற துறையை காட்டிலும், காவல் துறையில் காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுகின்றனர். அதனால், காவலர்களுக்கு மன அழுத்தம், ரத்த அழுத்தம், உடல் சோர்வு போன்ற பல்வேறு பிரச்சினைக்கு உள்ளாகி விடுகின்றனர்.
ரத்த அழுத்தத்தினால் இதயத்தில் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. மற்ற துறையை விட காவல் துறையினருக்கு மன அழுத்தம் அதிகமாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் மாதத்தில் இதே போல காவல் துறையினருக்கான மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இது போன்ற மருத்துவ முகாமில் காவல் துறை அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும் பத்தில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று (நேற்று) நடைபெறும் இந்த மருத்துவ முகாம் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்பி புஷ்பராஜ், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மீண்டும் ஜூன் மாதத்தில் இதே போல மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.