தொலைத் தொடர்பு சேவை 3-வது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டதால் அவசர உதவிக்குகூட யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேவேளையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தடையின்றி தனது தொலைபேசி சேவையை வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
'வார்தா' புயலால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் பல இடங்களில் நேற்று முன்தினம் பல செல்போன் கோபுரங்களின் கேபிள்கள் சேதமடைந்தன.
இதன்காரணமாகவும், மின் விநியோகம் முழுமையாக இல்லாததாலும் தொலைத் தொடர்பு சேவை 3-வது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டது.
செல்போன்களில் சிக்னல் கிடைக்காததால், அவசர உதவிக்குக் கூட தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை நிலவும் சூழலில், சென்னையில் பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை இல்லாததால் கிரெடிட் கார்டுகளும், டெபிட் கார்டுகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இதனிடையே, 'வார்தா' புயலால் அனைத்து தனியார் தொலைபேசி நிறுவனங்களின் சேவைகள் செயலிழந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தடையின்றி தனது தொலைபேசி சேவையை வழங்கி வருவது கவனிக்க வைத்துள்ளது.
ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தங்களது நெட்வொர்க் இணைப்புகளை முறையாக ஆய்வு செய்து பராமரித்து வருவதே இதற்குக் காரணம் என பிஎஸ்என்எல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.