சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்கு தெரிந்த மூத்த தலைவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அத்தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், தான் போட்டியிடவில்லை என்றும், இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகவும், கட்சி அறிவித்தால் தனது மகனை நிறுத்துவேன் என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். இதனிடையே, கட்சி வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க கடலூர் சென்றிருப்பதால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட சிலரின் பெயர்களை கட்சி தலைமைக்கு பரிந்துரைப்பது என கூட்டத்தில் முடிவெடுத்து இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.