தமிழகம்

2006-ல் இருந்து பதவி வகித்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள்: சொத்துப் பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

2006 முதல் தற்போது வரை பதவி வகித்த சென்னை மாநகராட்சி கவுன் சிலர்களின் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன்.தங்கவேலு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் என் வீட்டுக் குள்ளும் 7 அடி வரை தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தேன். ஆனால் சென்னை மாநகராட்சிக்கு போதிய வருவாய் இல்லை என்றும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக நிவாரணம் வழங்க முடியாது எனவும் அவர்கள் பதில் அளித்தனர். இதையடுத்து நானே களமிறங்கி விசாரித்தபோது மாநகராட்சியின் நிதி ஆதாரமே கவுன்சிலர்களின் கையில்தான் உள்ளது என்பது தெரியவந்தது.

உதாரணத்துக்கு, ஈஞ்சம்பாக்கம் பகுதி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்த அண்ணா மலைக்கு சொந்தமாக 12 பங்களாக்கள் உள்ளன. ஈஞ்சம்பாக்கம் தேவி நகரில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு சொத்து வரியாக ரூ.55, கிழக்கு கடற்கரை சாலை ஆசிரியர் காலனியில் உள்ள வீட்டுக்கு ரூ.110, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 3 வீடுகளுக்கு தலா ரூ.55, ஈஞ்சம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள 2 வீடுகளுக்கு தலா ரூ.1,940, திருவள்ளுவர் சாலையில் உள்ள வீட்டுக்கு ரூ.110, சோழிங்கர் எம்ஜிஆர் நகரில் உள்ள வீட்டுக்கு ரூ.3,650 என சொற்ப அளவில் சொத்து வரி விதிக்க அதிகாரிகளை நிர்பந்தம் செய்துள்ளார்.

இதுபோல எல்லா கவுன்சிலர்களின் சொத்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கவுன்சிலர் அண்ணாமலையின் சொத்துகளுக்கு விதிக்கப்பட்ட வரியை மறு ஆய்வு செய்து சட்டப்படி தகுந்த வரி விதிக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் வரிவிதிப்பு புலனாய்வு இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர், கவுன் சிலர் அண்ணாமலையின் 12 பங்களாக்களின் புகைப்படங்களை யும், மாநகராட்சி ஆண் கவுன்சிலர்கள் ஆடி, பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களிலும், பெண் கவுன்சிலர்கள் தங்க நகைகளை அதிக அளவில் போட்டுக்கொண்டு மாநகராட்சி கூட்டத்துக்கு வருவது தொடர்பாக ஒரு நாளிதழில் வெளிவந்த புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

கவுன்சிலர் அண்ணாமலையின் பங்களாக்களைப் பார்த்த நீதிபதி, வீடுகள் எல்லாம் அரண்மனை போல உள்ளன. இந்த பங்களாக்களுக்கு சொத்து வரியாக வெறும் ரூ.55, ரூ.110 வசூலிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் எல்லோரும் எவ்வளவு தீவிரமாக பொது சேவை புரிந்துள்ளனர் என்பது இந்த புகைப்படங்களைப் பார்த்தாலே தெரிகிறது. எனக்கு ஆடி மாதம்தான் தெரியும். ஆடி காரைத் தெரியாது. கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தங்களது வேட்பு மனுவுடன் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்து இருப்பர். எனவே அந்த சொத்து விவரப் பட்டியலை வரும் வெள்ளிக்கிழமை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிட பழைய கவுன்சிலர்களே மீண்டும் வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பர். எனவே அந்த சொத்து விவரங்களையும், மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 2-க்கு தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT