'வார்தா' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் தலைமையில் குழு வர உள்ளது. இக்குழு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'வார்தா' புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. மின்சாரம், பால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மரங்களை அகற் றுவது உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'வார்தா' புயல் கடந்த 12-ம் தேதி அதிதீவிர புயலாக மாறி சென்னை மாநகர், புறநகர் பகுதிகளை தாக்கியது.
புயல் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் உடைந்து சாலைகள், கட்டிடங்கள், வாகனங் களின் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. 3 மாவட்டங்களிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்களை 'வார்தா' புயல் சாய்த்தது.
சாலைகள், தெருக்களில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள், காவல், தீயணைப்பு துறையினர், சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரங்களை அப்பறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 17 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 40 கோபுரங்கள், 800 மின்மாற்றிகள் மற்றும் 4500 மின் பகிர்மானப் பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், 15,000 கி.மீ. உயர்நிலை மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் 'வார்தா' புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும், நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக தலைவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, தமிழகத்தில் 'வார்தா' புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழகம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.
இந்த சூழலில் 'வார்தா' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் தலைமையில் குழு வர உள்ளது. இக்குழு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.