கிருஷ்ணகிரி: தொடர் மழையால், அரசம்பட்டி பகுதியில் தென்னங்கன்று விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, இருமத்தூர், பண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டு கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்காக இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட நர்சரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தரமான விதை தேங்காய்கள் பதியம் போடப்படுகிறது. ஒரு வருடத்தில், 3 அடி வரை தென்னங்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.
தேங்காய விலைக்கு ஏற்ப...
ஒரு தென்னங்கன்று தரத்தைப் பொறுத்து ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம். மேலும், தேங்காய் விலையை பொறுத்தே தென்னங்கன்றுகள் விலையும் இருக்கும். இந் நிலையில் கடந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்ததால், தென்னங்கன்றுகள் விலையும் சரிந்தது.
இதன் எதிரொலியாக ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால், மீண்டும் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், தென்னங்கன்று உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கைகொடுத்த தேங்காய் பூ
அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை விவசாயி பிரபு மற்றும் சிலர் கூறியதாவது: அரசம்பட்டி பகுதிகளில் காணப்படும் சிறந்த மண்வளம் காரணமாக தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்களும் சுவை நிறைந்து காணப்படும்.
இதனால் வெளி மாவட்ட, மாநில விவசாயிகள் பலர் நேரடியாக வந்து கன்றுகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னங்கன்றுகள் விலை சரிந்தது. இருப்பினும் `தேங்காய் பூ' விற்பனையால் இழப்பை சமாளித்தோம். ஆனாலும், போதிய அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை.
புதிய ஆராய்ச்சி மையம்..
தற்போது பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பியும், மண்ணில் ஈரத்தன்மை குறையாமலும் உள்ளதால் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்ய மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது உயரம், தரத்தை பொறுத்து ஒரு தென்னங்கன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விலைபோகிறது. நாள்தோறும் குறைந்தது 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், தென்னையில் நோய் தாக்குதல் உள்ளிட்டவையால் விவசாயிகள் அடிக்கடி இழப்பினை சந்தித்து வருகின்றனர். எனவே, அரசம்பட்டியை மையமாக வைத்து, தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும், என்றனர்.