சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற `ரோஜ்கார் மேளா' வேலைவாய்ப்பு முகாமில் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் பொது இயக்குநர் அன்பழகன், ஆணையர் எம்.ஜி.தமிழ்வளவன், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை ஆணையர் எம்.ரத்தினசாமி, திரிபாதி பிஸ்வாஸ் மற்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் டி.பி.சிங் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

மேன்மை நிலையை அடைந்தபிறகு பெற்றோரை கைவிடக் கூடாது: இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் `ரோஸ்கர் மேளா' என்ற வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் நேற்று மத்திய அரசுத் துறையின் பல்வேறு நிறுவனங்களில் சேரவிருக்கும் 71 ஆயிரம் பேருக்கு 45 இடங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை பிரதமர் மோடிகாணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்ச்சியில், மத்திய சமூகநீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமை தாங்கி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் 15 துறைகளில், 29 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 116 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியதாவது: மத்திய அரசின் நோக்கமே அனைவரது வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

இதற்காக பிரதமர் மோடிபல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். பொருளாதார மேம்பாட்டில் உலக அளவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். வெகு விரைவில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வல்லரசு நாடாகும்.

வேலை பெற்றப்பின் ஒவ்வொருவருக்கும் பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. மேன்மை நிலை அடைந்தபிறகு பெற்றோரை கைவிடக்கூடாது. அதேபோல் புதிதாக பணி ஆணை பெற்று அரசு பணிகளில் சேருபவர்களுக்கு தேசிய திறன்கட்டமைத்தல் திட்டமான ‘கர்மயோகி’ திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படும். இது அவர்களுக்கு பணி தொடர்பான அனுபவங்களை கற்க உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் பொது இயக்குநர் அன்பழகன், ஆணையர் எம்.ஜி.தமிழ்வளவன், முதன்மை ஆணையர் பார்த்திபன், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை ஆணையர் எம்.ரத்தினசாமி, தெற்கு ரயில்வே கூடுதல் சென்னை கோட்ட மேலாளர் தேஜ்பிரதாப் சிங் பங்கேற்றனர்.

அதேபோல, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரிபங்கேற்று, 85 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் எம்.வி.எஸ் சவுத்ரி, வருமானவரித் துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன், ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் மாண்டலிகா சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT