தாம்பரம்: பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் பலத்த காயமடைந்தார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்சார் ஆலம் (27). செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறா. இந்நிலையில், திரிசூலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது தளத்தில் வெளிபுறம் கட்டிட பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால், ஏற்பட்ட வலியால் அவர் அலறி துடித்துள்ளார். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு, மருத்துவர்கள் அவரின் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை வெளியே எடுத்து, அவரது காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்த பல்லாவரம் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், மீனம்பாக்கத்தை அடுத்த குட்ட மலை பகுதியில் மத்திய தொழில்படை பாதுகாப்பு போலீஸார் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு மேற்கண்ட நபரின் காலில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. எனினும், இதுதொடர்பாக பல்லாவரம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.