தமிழகம்

ஆவடி, திருவள்ளூரில் தண்டவாளங்களை கடக்க முயன்று கடந்த ஆண்டில் கவனக்குறைவால் பறிபோன 120 உயிர்கள்: ரயில்வே போலீஸார் எச்சரிக்கை

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் கடந்த 2022-ம் ஆண்டில் ரயில்களில் அடிப்பட்டு 120 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே, பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடக்க சுரங்கப்பாதை மற்றும் நடை பாலங்களை பயன்படுத்தவேண்டும் என, ரயில்வே போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் நடக்கும் குற்றச்செயல்கள், விபத்துகள் உள்ளிட்டவை தொடர்பாக சென்னை- பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில்வே காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளில் கணிசமானவை, ரயில்களில் அடிப்பட்டு நடக்கும் உயிரிழப்பு சம்பவங்கள்தான்.

இந்நிலையில், ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் கடந்த 2022-ம் ஆண்டில் ரயில் தண்டவாளங்களை கவனக்குறைவோடு கடந்ததால் 120 பேர், ரயில்களில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டைவிட 18 அதிகம்.

இதுகுறித்து, ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது: சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், அம்பத்தூர் ரயில் நிலையம் முதல், பட்டாபிராம் இ-டிப்போ வரையான சுமார் 15 கி.மீ. தூர பகுதிகள் ஆவடி ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் இருக்கின்றன. அதே போல், நெமிலிச்சேரி ரயில் நிலையம் முதல், கடம்பத்தூர் ரயில் நிலையம் வரையான 21 கி.மீ. தூர ரயில்வே பகுதிகள், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் வருகின்றன.

இவ்விரு காவல் நிலைய எல்லைக்குள், திருமுல்லைவாயில், இந்துக் கல்லூரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு உள்ளிட்ட 16 ரயில் நிலையங்கள் உள்ளன.

ஆவடி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைகளில் தண்டவாளத்தை கவனக்குறைவோடு கடப்பது போன்ற செயல்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், ஆவடி ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு 65 பேர் ரயில்களில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில், 59 ஆண்கள், 3 பெண்கள் ஆகும். ரயில்களில் தவறி விழுந்து இருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து ஒருவர் என 3 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் ரயில்களில் அடிப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 55 ஆண்கள், 3 பெண்கள் என 58 பேர் ரயில் தண்டவாளத்தை கவனக் குறைவாக கடந்ததால், ரயில்களில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 5 ஆண்கள், ஒரு பெண் என, 6 பேர் ரயில்களில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

எங்கள் எல்லைகளில் உள்ள ரயில் நிலையங்களில் நாள்தோறும் ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன. ஆகவே, இனியாவது, ரயில் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடக்க சுரங்கப்பாதை மற்றும் நடை பாலங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT