சென்னை: நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரமே அடிப்படை என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் தொடங்கப்பட்ட `ரீச்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ‘ஆரோக்கிய சமத்துவத்தை நோக்கி-இந்தியாவுக்கான ஒரு தொலைநோக்கு' என்ற தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியாசுவாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், ரீச் நிர்வாக இயக்குநர் நளினி கிருஷ்ணன், ரம்யா அனந்தகிருஷ்ணன், `இந்து' என்.ராம் மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள், காசநோயில்இருந்து குணமடைந்தவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், ரீச் நிறுவனத்தின் 25-வது ஆண்டு இலச்சினையை (லோகோ) அமைச்சர் மா.சுப்பிரமணியன், சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
இதில் சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: 2025-ம் ஆண்டில் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும்என்று முயற்சித்து வருகிறோம். இதற்கு, காசநோய்க்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் 90 சதவீதம் பேர் பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரமான வீடு, உணவு உள்ளிட்டவை கிடைக்காவிட்டால், எத்தனை மருத்துவமனைகள் கட்டினாலும் போதாது. நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரம்தான் அடிப்படையானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அண்மையில், உலக சுகாதார அமைப்பும், ஐசிஎம்ஆரும் இணைந்து தேசிய அளவில் காசநோய் தொடர்பான ஆய்வைமேற்கொண்டன. ஏறத்தாழ ஒரு லட்சம்பேரைப் பரிசோதித்ததில், 300 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசநோய் இறப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது.
சர்க்கரை நோய், காசநோய் பாதிப்புகளில், தேசிய அளவில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் காசநோய்க்கான முக்கியக் காரணி ஊட்டச்சத்து குறைபாடுதான். பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினரிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவுகிறது. இதுதான் காசநோய் அதிகரிக்கவும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
அதிக அளவில் பரிசோதனை செய்ததால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது. அதேபோல, காசநோய் பரிசோதனைகளையும் அதிகம் மேற்கொள்ள வேண்டும். மேலும், காசநோயை ஒழிக்கஅனைவருக்கும் சுகாதாரக் கல்வி அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, "தமிழகத்தில் 2025-ம் ஆண்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காசநோயைக் கண்டறியபுதிய திட்டங்களைச் செயல்படுத்தியதால், 96,500 புதிய காசநோயாளிகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது" என்றார்.