தமிழகம்

மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து தான் தீர்வு; தாய்மொழியில் எழுதுவது அல்ல: ராமதாஸ் அறிக்கை

செய்திப்பிரிவு

மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துதான் தீர்வே தவிர தாய்மொழியில் எழுதுவது அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை (NEET) தமிழ் உள்ளிட்ட ஆறு மாநில மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுடன் அஸ்ஸாமி, வங்கமொழி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் எழுதலாம் என்று மக்களவையில் மத்திய சுகாதார இணையமைச்சர் அனுப்பிரியா படேல் கூறியிருக்கிறார்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை தமிழிலும், பிற மாநில மொழிகளிலும் எழுத அனுமதி அளித்ததன் மூலம் இந்தி பேசாத மக்களுக்கு பெரிய சலுகை அளித்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. உண்மையில் மருத்துவ நுழைவுத்தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதிப்பது குறித்த அறிவிப்பு புதியதும் இல்லை; இதனால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. கடந்த மே 10 ஆம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே, இதுகுறித்த யோசனையை நீதிபதிகளிடம் மத்திய அரசு தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அதை ஏற்றுக் கொண்டனர். அதன்பின் கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், மருத்துவநுழைவுத் தேர்வை 6 மாநில மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்தார். அது இப்போது முறைப்படி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர முக்கியத்துவம் எதுவுமில்லை.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை மாநில மொழிகளில் எழுதலாம் என்பது கூட, இந்த விஷயத்தில் மாநிலங்கள் காட்டும் எதிர்ப்பை சற்று குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி தானே தவிர, இந்தி பேசாத மக்கள் மீது காட்டப்படும் அக்கறை அல்ல. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி), இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) ஆகியவற்றுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வை திணித்து, அதை தமிழில் எழுதுவதற்கு அனுமதி அளிப்பதாகக் கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலை ஆகும்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் என்பதால், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கையே தவிர, தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பது அல்ல. நமக்குப் பிடித்த பாத்திரத்தில் தரப்படுகிறது என்பதற்காக நஞ்சை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல் தமிழில் எழுதலாம் என்பதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, ஒரே தரத்திலான கல்விமுறையை கொண்டு வந்த பிறகு தான் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஆசிரியர்களே இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவர்களையும், நகர்ப்புறங்களில் ஒரு பாடத்திற்கு இரு ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் படிப்பதுடன், தனிப்பயிற்சி வகுப்புக்கும் செல்லும் மாணவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; அது சமூகநீதிக்கு செய்யும் பெருந்துரோகம்.

அடுத்த ஆண்டிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டதாலேயே அத்தேர்வு கட்டாயமாகி விட்டதாக அர்த்தமல்ல. தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு 1984-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகளுக்கு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. 2006-ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுத் தான் தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகள் ஒழிக்கப்பட்டன. அச்சட்டம் செல்லாது என்று இன்று வரை அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை ரத்து செய்து 2013-ஆம் ஆண்டு 18-ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் அளித்த தீர்ப்பு, அந்த தீர்ப்பை ரத்து செய்தும், நுழைவுத்தேர்வு செல்லும் என்று கூறியும் 11.04.2016 அன்று அனில் தவே தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சட்ட அமர்வு அளித்த தீர்ப்பு, நடப்பாண்டிலேயே நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்று 28.04.2016 அன்று அனில் தவே தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமர்வு அளித்தத் தீர்ப்பு ஆகியவற்றுக்கு இடையே ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அனில்தவே ஓய்வு பெற்று விட்ட நிலையில், புதிய அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கிடையே காணப்படும் முரண்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளுக்கு தடை பெறுவது தான் தமிழக அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று தமிழக அரசே நம்பிக்கையின்றி கூறுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே, உச்சநீதிமன்றத்தை விரைவாக அணுகி சாதகமான தீர்ப்பை பெற்றோ, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டத்திருத்தம் செய்தோ அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT