ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்திய அரசின் 'அமரித் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் கீழ் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட இருக்கிறது
மத்திய அரசின் சார்பில் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1000 சிறிய ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் ஒரு ரயில்வே மண்டலத்தில் உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் மையமாக உள்ள 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்த திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5 ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கெனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் மதுரை மண்டலத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கோவில்பட்டி, பழனி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் மதுரை - கொல்லம் ரயில் வழித்தடத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர் ஆகிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழகம் - கேரளா இடையே இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது, என்றார்.