சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அவருக்குஎதிராக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய தாவது: ஆளுநர் ரவியின் தமிழ் மற்றும் தமிழர் விரோத போக்கை கண்டித்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது ரவி என்ற தனி மனிதனுக்கு எதிரான போராட்டம் இல்லை.அவர் மையப்படுத்தும் ஆர்எஸ்எஸ்,பாஜக, சனாதன தர்மம் என்ற பழமைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
காந்தியை போன்ற ராம பக்தர்யாரும் இருக்க முடியாது. இன்றுராமர் இருந்திருந்தால் காந்திக்குதான் வாக்களித்திருப்பார். பாஜகவுக்கு வாக்களித்திருக்க மாட்டார்.காந்தி கடவுள், மத நம்பிக்கை உடையவர். ஆனால் தீண்டாமை, உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தார். ஆனால்ஆதீனங்களோ, சங்கராச்சாரியாரோ தீண்டாமையை எதிர்க்கவில்லை.
காங்கிரஸ் கட்சி பழமைவாதத்துக்கு எதிரானது. காங்கிரஸ் எந்தமதத்துக்கும் ஆதரவானது இல்லை.எதிரானவர்களும் இல்லை. எங்களுக்கும் மத உணர்வு உண்டு. ஆனால் மத வெறி இல்லை.
ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய அரசின் பிரதிநிதி. ஆர்எஸ்எஸ், பாஜக பிரதிநிதிபோல ஆளுநர் பேசக்கூடாது. பாஜக, ஆர்எஸ்எஸ் சொல்லித் தருவதை அப்படியே செயல்படுத்தும் மாணவராக ஆளுநர் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, உ.பலராமன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.