தமிழகம்

தமிழகத்தின் எல்லைக்குள் கேரளா சர்வே எடுக்கவில்லை: அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

கோவை: கேரளா அரசு தமிழக எல்லைக்குள் வந்து சர்வே எடுக்கவில்லை. இவ்விவகாரத்தில் எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் என எந்த மனுவாக இருந்தாலும் 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இ-சேவை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரளா அரசு டிஜிட்டல் முறையில் எல்லையை சர்வே எடுக்கும்போது, தமிழக எல்லைக்குள் வந்து சர்வே எடுக்கவில்லை. தமிழக எல்லையில் எங்களது அனுமதியில்லாமல் சர்வே செய்ய வரக்கூடாது என கேரளா அரசிடம் தெரிவித்துள்ளோம்.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

மேலும், இவ்விவகாரத்தில் உரிய கண்காணிப்புடன் இருக்குமாறு கேரளா எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

கிராம உதவியாளர் பணி தேர்வில் முறைகேடு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சரிபார்ப்பு பணியும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT