திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.555.65 கோடியில் 6,628 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
பெருந்தொழுவு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், ரூ.19.10 கோடி மதிப்பீட்டில் 192 வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.வினீத் நேற்று ஆய்வு செய்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியத்தில், பட்டா நிலத்தில் வீடு கட்ட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. வாரியம் சார்பில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பட்டா உள்ள நிலங்களில் வசிக்கும்ஏழைகள் வீடு கட்ட மத்தியஅரசு ரூ.1.50 லட்சமும், மாநிலஅரசு ரூ.60 ஆயிரமும் மானியம்வழங்குகின்றன. அஸ்திவார நிலை,ஜன்னல் மட்டம், கூரைமட்டம் என தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பணிகள் முடிந்த பிறகு ரூ.60 ஆயிரம் விடுவிக்கப்படுகிறது.
இதற்காக பொதுமக்களிடம் இருந்துபெறப்படும் விண்ணப்பங்கள் தலைமை இடத்துக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். தேர்வாகும் பயனாளிகளுக்கு வீடு கட்டும்போது, 4 கட்டமாக மானியம்வழங்கப்படும். மாநகராட்சி பகுதியில் வசிக்கும், சொந்த இடம் வைத்துள்ளவர்கள் வீடுகட்ட மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை மேற்கொள்வர். மத்திய அரசின் மற்றொரு திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், குடிசை அல்லாத பகுதியில் வீடு கட்ட ரூ. 2.10 லட்சத்துக்கு வட்டி மானியம்வழங்கப்படும். வங்கிகளில் பெறும்ரூ. 6 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு, 6.5 சதவீதம் அளவுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.
அதிக கடன் பெற்றாலும், ரூ.6 லட்சமே வட்டி மானியம் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 4,220 வீடுகள் ரூ.334.68 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 2,408 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ரூ.220.97 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. பெருந்தொழுவில் கட்டப்பட்டு வரும் வீடுகள், வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வீடற்ற ஏழைகள் மற்றும் மாநகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்படும். ஒரு வீட்டின் மதிப்புரூ.9.94 லட்சம் ஆகும்.
இதற்குபயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, உதவிபொறியாளர் சர்மிளா தேவி, தெற்கு வட்டாட்சியர் தெ.கோவிந்தராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.