ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, மக்கள் குறைதீர் நாள் கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆட்சியர்எச்.கிருஷ்ணன் உன்னியும், தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படம், சிலைகள், பெயர்,விளம்பரப் பலகைகள் போன்ற வற்றை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத் தில், எம்ஜிஆர் மாளிகை என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வளாகத்தில் இருந்த கல்வெட்டுகள் மூடப்பட்டுள்ளன. மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்கள் அகற்றப்பட்டன.
அதேபோல, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், விழிப்புணர்வு பேனர்கள் போன்றவை அகற்றப் பட்டுள்ளன. தொகுதியில் உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, அம்பேத்கர் சிலைகள் மற்றும் அரசு மருத்துவமனை அருகே வைக்கப்பட்டுள்ள காமராஜர், ஈவிகே சம்பத் சிலைகளும் மறைக்கப்பட்டுள்ளன.
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக வாரந்தோறும் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மார்ச் 4-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை, 1077 மற்றும் 0424 – 2260211, வாட்ஸ் அப் எண் 97917 88852 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் வரும் 21-ம் தேதி நடக்கவிருந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூ.50 ஆயிரம் வரை ரொக்கம் வைத்திருக்க அனுமதி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 3 பறக்கும்படை, 3 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இது தவிர வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்படும்.
அந்த தொகுதியில் வசிப்பவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வேட்பு மனுத்தாக்கலுக்கு 10 நாள் முன்வரை, பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். தகுதியானவர்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்படும். துணைப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களும் இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி, இடைத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் தற்போது ஈரோடு கிழக்கில் அமலுக்கு வந்துள்ளதால், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், என்றார்.