தமிழகம்

தமிழகம், புதுச்சேரிக்கு விற்பனைக்கு வரும் கேரள மீன்களில் ரசாயனப் பொருட்கள்: இரு மாநில முதல்வர்கள் தலையிட வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கேரளத்திலிருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விற்பனைக்கு வரும் மீன்கள் கெடாமல் இருக்க ரசாயனப் பொருட்கள் செலுத்தப்படுவதாகவும், இரு மாநில முதல்வர்கள் இவ்விஷயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கடற்கரை பெருநகரங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் கேரள மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சங்கரா மீன் உள்பட பலவகை கேரள மீன்கள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன்களில் ரசாயனம் கலந்து இருப்பதாக இங்கிருக்கும் மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விற்பனைக்கு வரும் கேரள மீன்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் கலந்திருப்பது கேரளாவில் நடைபெற்ற பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீன்கள் நீண்டகாலத்துக்கு கெடாமல் இருப்பதற்காக மீன்களில் ரசாயனத்தை செலுத்துகின்றனர். இத்தகைய ரசாயனம் சேர்க்கப்பட்ட மீன்களை உண்ணும் மக்கள் புற்றுநோய் உள்பட உயிருக்கு ஆபத்தான பல உடல்நல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிகிறது.

கேரளத்திலிருந்து தமிழகம், புதுச்சேரிக்கு வரும் மீன்களை சோதனை செய்ய வேண்டும். தமிழக, புதுச்சேரி மாநில முதல் வர்கள், போர்க்கால அடிப்படையில் இதற்குரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

ஜனவரி 2-ம் தேதி கொழும்பு நகரில் இந்திய - இலங்கை நாட்டு மீன்வளம் சார்ந்த அமைச்சக கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் பங்கேற்று இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.

இக்கூட்டத்துக்கு முன்பு இலங்கை சிறையில் இருக்கும் 51 தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்க வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக இலங்கையில் இருக்கும் தமிழக மீனவர்களின் 123 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 123 படகுகளுக்கும் முழுமையான நஷ்ட ஈட்டை மத்திய அரசு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் தேசிய மீனவர் பேரவை சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT