ஓசூர்: ஓசூர் அருகே 5-வது சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. உள்ளிட்ட 141 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
அப்போது, விவசாயிகள் 8 பேர் காவல் நிலையம் எதிரே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘சிப்காட் அமைக்க விளைநிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்’ என முழக்கங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் மற்றும் சூளகிரி வட்டாட்சியர் அனிதா தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விவசாயிகள் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்க மறுத்து விட்டனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமார், விவசாயிகளுடன் இணைந்து உத்தனப்பள்ளி-ராயக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர்களிடம் எஸ்பி சரோஜ்குமார் தாகூர், ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்த உடன்பாடும் எட்டாத நிலையில் போராட்டம் தொடர்ந்தால், எம்.பி. செல்லகுமார் மற்றும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் உள்ளிட்ட 141 பேரை போலீஸார் கைது செய்தனர்.