தமிழகம்

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்: ஜல்லிக்கட்டில் சாதித்த மதுரை மின் வாரிய ஊழியர் வலியுறுத்தல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘கார் வாங்க வசதியில்லை. எப்படி யாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் விளையாடி கார் பரிசு பெற்றுள்ளேன்,’’ என்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக் கட்டில் 3-வது முறையாக சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்ற ஆர்.விஜய் (23) தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டில் ஒரு காளையை அடக்குவதே வீரர்களுக்கு பெரும் சிரமம். அந்த ளவுக்கு காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை கொடுத்து அவற்றின் உரிமையாளர்கள் தயார் செய்கிறார்கள். ஆனால், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஆர்.விஜய் என்பவர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி 3-வது முறையாக சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்று அசத்தி உள்ளார்.

முதல் 2 முறை அவருக்கு இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த முறை கார் பரிசு கிடைத்தது. வாடகை வீட்டில் வசிக்கும் நிலையில், தற்போது பரிசாக வாங்கிய காரை நிறுத்தக் கூட விஜய்க்கு இடமில்லை. கல்லூரியில் பிபிஏ படித்து வந்த நிலையில் தொடர்ந்து படிக்க வசதியின்றி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

குடும்பச் சூழலால் மின்வாரியத் தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலையில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு மின்வாரியத்தில் நிரந்தர வேலை கிடைத்து தற்போது கேங் மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். மின்வாரியத்தில் பணிபுரிந்தாலும் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஜல்லிக்கட்டு விளையாடச் செல்வதற்காக ஒருபோதும் விடுமுறை எடுப்பதில்லை. ஞாயிற் றுக்கிழமை விடுமுறை நாளில் நடக் கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மட்டும் இவர் பங்கேற்கிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2020, 2021, 2023-ம் ஆண்டில் 3 முறை சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்று அசத்தியுள்ளார். இந்த முறை கார் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் இருந்த அவரை சந்தித்தோம்.

இது குறித்து விஜய் கூறிய தாவது: ஜல்லிக்கட்டில் ஆரம்ப காலத்தில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை. 2017-ம் ஆண்டு ஜல்லிக் கட்டுப் போராட்டம் வெடித்தபோதுதான், இந்த போட்டி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவ்வளவு கூட்டம் திரள்கிறார்களே என ஆச்சரியப் பட்டேன். அதன்பிறகுதான், ஜல்லிக்கட்டு ஒரு வகையில் நாட்டினக் காளைகளை பாது காக்க உதவுவதை தெரிந்து கொண்டேன்.

மேலும், இந்த வீர விளையாட்டு நமது பாரம்பரியம், அடையாளத்தை அடுத்தடுத்த தலை முறையினருக்கு கடத்துகிறது. அதனால், ஜல்லிக்கட்டு மீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. ஊரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாடு பிடிக்க என்னோடு படித்தவர்கள், நண்பர்கள் செல்வர். அவர்களுடன் சென்று காளைகளை பிடிக்க பழகினேன்.

ஆரம்பத்தில் களத்தில் இறங்கவே அஞ்சினேன். நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தால் விடுமுறை நாட்களில் தொடர் பயிற்சி எடுத்து காளைகளை சிறப்பாக அடக்கப் பழகினேன். போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றேன். ஆனால், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் மட்டுமே கார் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரத்தில் கார் வழங்குவதில்லை.

எனக்கோ கார் வாங்க ஆசை. ஆனால், எனது குடும்பச் சூழலில் கார் வாங்க முடியவில்லை. இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இந்த முறை கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தனர். எப்படியும் கார் பரிசு பெற வேண்டும் என ஆசைப் பட்டேன். அதற்காக திட்டமிட்டு காளைகளை பிடித்தேன். நினைத்தபடியே கார் பரிசாக கிடைத்தது.

ஜல்லிக்கட்டில் உயிரை பணயம் வைத்துதான் காளைகளை அடக்குகிறோம். என்னைப் போன்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். நான் ஏற்கெனவே மின்வாரியத்தில் கேங்மேனாக இருப்பதால், எனக்கு பதவி உயர்வு வழங்கினால் நலமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT