கலை உலகில் சிறந்து விளங்கி தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் சோ என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சோவின் மறைவு குறித்து வாசன் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் சோவின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நாடகம் மற்றும் திரைப்படத்துறையில் நடிகராக, கதாசிரியராக, இயக்குனராக பல்வேறு பரிணாமங்களில் கலை உலகில் சிறந்து விளங்கி தனக்கென்று தனி முத்திரை பதித்தவர்.
துக்ளக் பத்திரிகையைத் தொடங்கி கல்வி, கலை, இலக்கியம், நாட்டியம், அரசியல், வரலாறு என பல்வேறு துறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை சோவுக்கு உண்டு.
மக்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தனக்கே உரிய பாணியில் அரசியல்வாதிகளும், பொது வாழ்வில் ஈடுபடுவோர்களும் வெளிப்படையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை தன் பத்திரிகையின் வாயிலாக வெளிப்படுத்தியவர்.
தன் மனதில் பட்டதை வெளிப்படையாக தன் பத்திரிகையின் மூலமும், பொது இடங்களில் பேசும் போதும் துணிச்சலாக எடுத்துரைக்கும் நற்குணம் படைத்தவர்.
தனது பத்திரிகையின் மூலம் தமிழகம் மற்றும் தேசிய அரசியல் குறித்து புள்ளிவிவரங்களைத் வெளியிட்டு பொது மக்கள் மத்தியிலும், அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மத்தியிலும் நாட்டு நிலவரங்களை கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
தமிழக அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் நல்ல நட்புடன் பழகிய பெருமை சோவுக்கு உண்டு.
மூப்பனாருடன் நெருங்கிப் பழகியவர். அதே பாசத்தோடும், அன்போடும் துக்ளக் ஆசிரியர் சோ என்னோடு பழகியதையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தனிப்பட்ட முறையில் துக்ளக் ஆசிரியர் சோ மீது பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.
அகில இந்திய அளவிலே அனைத்து பத்திரிகைத் துறையினருக்கும் துக்ளக் பத்திரிக்கையின் தனிச்சிறப்பு நன்கு தெரியும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அவர்களது இழப்பு தமிழ் திரை உலகிற்கும், இந்திய பத்திரிக்கைத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கலை மற்றும் பத்திரிகைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறை அருளை வேண்டுகிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.