வார்தா புயல் மற்றும் கன மழையால் மாங்காடு பேரூராட்சி சீனிவாசா நகர் பகுதியில் உள்ள வீடுகள் தண்ணீரில் மிதக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்காடு பேரூராட்சி 17-வது வார்டில் சீனிவாசா நகர், ஜனனி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமானோர் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இங்கு தண்ணீர் தேங்குவதால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் வீசிய ‘வார்தா’ புயலின்போதும் இப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தற்காலிக படகுகளை அமைத்து பயன்படுத்துகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற வழி இல்லாததால் கொசுக்கள், பூச்சி கள் உற்பத்தி அதிகரித்துள்ளது மர்ம காய்ச்சலால் இப்பகுதி மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தேங்கி நிற்கும் 4 அடி தண்ணீரை கடந்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்படுகிறது. தண்ணீரில் சாலைகள் மூழ்கியதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்கள் கூட வர முடிவதில்லை. விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதியில் படை எடுப்பதால் அச்சமாக உள்ளது.
எங்கள் பகுதியில் தொற்றுநோய் பரவாமல் இருக்க தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க, பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் மாங்காடு பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா கூறும்போது, ‘‘சீனிவாசா நகர், ஜனனி நகர் போன்ற மனைப் பிரிவுகள் அரசின் அனுமதி பெறாமல் ஏற்படுத்தப்பட்டவை.
மேற்கண்ட இடம் குட்டைபுறம்போக்கு நிலம் என்பதால் அங்கு தண்ணீர் தேங்குகிறது. அதனால், அங்கு தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண பேரூராட்சியிடம் எந்த திட்டமும் இல்லை. அவர்களே தீர்வு தேடிகொள்ள வேண்டியதுதான்’’ என்றார்.